Tuesday, April 3, 2007

ஏன் அரசியல்? - இலவசக் கல்வி

கல்வி என்பது ஒரு செல்வம். ஒரு சமூகத்தின் உயிர் நாடி கல்வி. அமைதியின் ஆணி வேர் கல்வி. முன்னேற்றத்தின் மூலதனம் கல்வி. இவ்வளவு மதிப்பு மிக்க செல்வம், ஏழைகளுக்கு எட்டா காட்சிப் பொருளாக சமூக சந்தையில்.

வரி விலக்கு அளித்ததால், கருப்பு பண முதலைகள் கண் பார்வை கல்வியின் பக்கம் திரும்பியது. கல்வி காவலர், பகுத்தறிவு பகலவன், என பல பட்டப் பெயர்களுடன் பணம் பார்த்தார்கள், பயங்கரவாதிகள். நல்ல எண்ணத்தில் வரி விலக்கு அளித்தால், அதை பயன்படுத்தி குறுகிய எண்ணத்துடன் கோடிகளை குவித்தார்கள் கொள்ளைக்காரர்கள்.

பால் குடி மறக்காத, குழந்தையை பள்ளியில் சேர்க்க ஐயாயிரம் ருபாய், மருந்துவம் படிக்க இருப்பந்தைந்து லட்சங்கள்.பொறியியல் படிக்க ஆயிரம் முதல் லட்சங்கள் வரை. இவ்வாறு கல்வியை பண்டமாற்று முறையில் பயின்றவர்களிடம் பயனை எதிர் பார்க்க முடியுமா?? அவர்களின் ஓட்டமும் பணத்தைத் தேடி.

ஒருபுறம் இலவச கல்வி. மறுபுறம் வியாபாரமாகக் கல்வி. இலவச கல்வி பயின்றவர்கள், எட்டாம் வகுப்பும் எட்டாத நிலையில், ஐந்துக்கும் பத்துக்கும், அல்லும் பகலும் பாடு பட்டுவிட்டு, சரியான உணவும், உடையும் இல்லாமலே வாழ்க்கயை ஒட்டுகின்றனர். காசு இருப்பவர்கள் படிக்காவிட்டாலும், பதட்டுடன் மேல் வர்க்க எஞமான்களாக சமூகத்தில்..இதையும் மீறி படித்து விட்டாலும், சாதி, மதம், மொழி என எண்ணற்ற முட்டுக்கட்டைகள், முன்னேற்றத்தை முறியடிக்க!!!

வரி விதிப்பதில், சட்டத்தின் முன்னிலையில் - இது போன்ற எண்ணற்ற விசயங்களில் அனைவரையும் சமமாக பாவிக்கும் அரசாங்கம், ஏன் அனைவருக்கும் ஒரே மாதிரியன இலவச கல்வியை அமல் படுத்த முடியாது..?

படை செலவையும், பாதுகாப்பு செலவையும் ஏற்கும் அரசாங்கம் ஏன் படிப்பு செலவையும் ஏற்கக்கூடாது..?

இலவச கல்விகாக வரியை கொஞ்சம் அதிகப் படுத்தி அதை அப்படியே கல்விக்காக பயன்படுத்தினால், வல்லுனர்களும் அறிஞர்களும் உருவாகவிட்டலும், ஒழுக்கமுள்ள சமுகமாக, நேர்மையான சமுகமாக, நமது சமூகம் உருவெடுக்கும் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.