Friday, March 23, 2007

ஏன் அரசியல்?

நீ ஏன் அரசியல்ல இறங்கக்குடாது?? - , கேட்ட அடுத்த நிமிடம், "அரசியலா!!! - எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை", "அது ஒரு சாக்கடை அதில் யார் இறங்குவது", "பணம் இருக்கிறவர்கள் மட்டுமே வர முடியும் நம்மால் முடியாது", "அது ரவுடிகளின் ராஞ்யம் நம்மை அழித்துவிடுவார்கள்" "எனக்கு குடும்பம் இருக்கிறது" - இது போல் எண்ணற்ற எதிர்வாத பதில்கள்.

ஒரு சில எழுத்துக்களால் ஆன சின்னக் கேள்வி. இருப்பினும், ஆழ்ந்து யோசிக்க வேண்டிய அற்புதமான கேள்வி.

நமது இன்பம்-துன்பம், உயர்வு-தாழ்வு, முன்னேற்றம்-பின்னேற்றம், வாழ்வு-சாவு, இது போன்ற, வாழ்வின் ஒவ்வோர் அங்கத்தின், ஆணிவேர் அரசியல்.
நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விசயத்திலும், எலும்பும் சதையும் போல், அரசியல் பிண்ணிப் படர்ந்து கிடக்கிறது.

அப்படிப்பட்ட அரசியல் அழுக்கு பிடித்து, கரைகள் படிந்து, அருகில் அணுக முடியாதபடி, பயங்கரமாக இருக்கிறது.

மக்களால் மக்களுக்காக நடத்தப் படவேண்டிய அரசியல் ஒரு சிலரின் சுயநோக்குச் சிந்தனைகளால் சுருண்டு கிடக்கிறது.

படித்த பண்புள்ள இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது பலரின் பகல் கனவாகவே பவனிவருகிறது.

இளைஞர்களால் இது மாறும் என்ற தொலை நோக்குப் பார்வையில், என்னுடைய நேர்வாதச் சிந்தனைகளுடன், இனிவரும் பதிப்புகள்...

Friday, March 16, 2007

எனது படைப்புகள்...

கனவு.....
இன்று உன் மனதின் கனவு
நாளை நம் வாழ்வின் நனவு

நீ..
கருத்தும் நீயே, காட்சியும் நீயே,
புதுமையும் நீயே, புதிரும் நீயே,

முதலும் நீயே, முடிவும் நீயே,
முயற்சியும் நீயே, முட்டுக்கட்டையும் நீயே,

நிதானமும் நீயே, நிம்மதியும் நீயே,
நிழலும் நீயே, நெருப்பும் நீயே,
நித்தமும் நீயே, நிந்திரையிலும் நீயே,

வாழ்வும் நீயே, வ்சந்தமும் நீயே,
வாசிப்பும் நீயே, வர்ணிப்பும் நீயே,
வித்தும் நீயே, விமர்சிப்பும் நீயே,

இனிமையும் நீயே, இடைஞ்சலும் நீயே,
இன்றும் நீயே, இனிமேலும் நீயே..

வேண்டியது....
செய்ய வேண்டியது கடைமை
பெறவேண்டியது உரிமை

அளிக்க வேண்டியது அன்பை
அடைய வேண்டியது புகழை

நம்ப வேண்டியது துணிவை
காட்ட வேண்டியது பணிவை

இருக்க வேண்டியது பொறுமை
இப்படியிருந்தால் வாழ்வே இனிமை

வாழ்வு...
ஒன்று பெற்றால் உண்டு வாழ்வு
இரண்டு பெற்றால் இறுகிய வாழ்வு
மூன்று பெற்றால் முடிந்தது வாழ்வு
இதற்குமேல் இந்தியாவிற்கு இல்லை வாழ்வு..

Monday, March 12, 2007

உனக்கு நாட்டுப்பற்று இருக்கா..??

(இருவரின் அர்த்தமற்ற அரட்டையில், ஒருவர்)
கிரிக்கெட்டில் அவனுக ஜெய்த்த என்ன.. தோத்தா என்ன!!

(கோபத்துடன் அடுத்தவர் )
உனக்கு நாட்டுப்பற்று இருக்கா..??

ஏன் இந்த கேள்வி..? அதுவும் கோபத்துடன்.எவ்வளவு பெரிய விசியம் நாட்டுப்பற்று.

கிரிக்கெட் ஒரு விளையாட்டு..பதினோர் பேர் விளையடுவதை பலகோடி மக்கள் ஆர்வத்துடன், வேலைகளை விலக்கி வைத்து விட்டு, பொழுதை வீனடிக்கும் ஒரு விளையாட்டு..சூதாட்டம் செய்து மக்களை ஏமாற்றிய ஒரு விளையாட்டு..

ஆம் நாட்டுப்பற்று இல்லாததுதான்..காசு விளையாடும், இது போன்ற விளையாட்டுக்காக, நாளை வீணாக்காமல், ஆர்வம் இல்லாமல் யாரு ஜெய்த்த என்ன.. தோத்தா என்ன!! என்று இருப்பது நாட்டுப்பற்று இல்லாததுதான்.

வரி ஏய்க்கும் போதும், சாலையில் குப்பை போடும் போதும், உருத்தாத உள்ளத்திற்கு, ஒருவன், "கிரிக்கெட்டில் அவனுக ஜெய்த்த என்ன.. தோத்தா என்ன!!" என சொல்ல கேட்டு, கொந்தளிக்கும் கோபத்துடன் "உனக்கு நாட்டுப்பற்று இருக்க..??" என வினவுவது நாட்டுப்பற்றுதான்.

நேரடி ஒளிபரப்பு உரிமத்திற்கு, குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச் சட்டம், புதுச் சட்டத்திற்கு மக்களவையில் மாசோத நிரைவேற்றம். என்ன வேகம்.!!! என்ன வேகம்!!! இது நம்மாலும் வேகமாக இயங்கமுடியும் என எடுத்துகாட்டுகிறது. இந்த வேகம் எல்லாவற்றிலும் இருந்தால் பாராட்டுதலுக்குரியது.

ஒன்றுக்கும் உதவாத இது போன்ற விசியங்களுக்கு நாட்டுப்பற்றை இழுப்பதை விட, நாட்டை சிறக்க வைக்கும் சின்னச் சின்ன விசியங்களிள் கவனம் செலுத்தினால் நாடும் முன்னேரும், நாமும் முன்னேருவோம்.

Friday, March 9, 2007

பாழாகும் பழனி !!!!

ஆறுபடை வீடுகளில் ஒன்றாம் பழனியில் பட்டப்பகலில் நடக்கும் பயங்கரங்களில் இதோ இங்கு சில..

பத்து ருபாய் முடி எடுக்க..அது மட்டுமின்றி பக்தர்களிடம் பறிப்பதோ, குறைந்தது இருபது, அதிகம் ஆளைப் பொறுத்தது. இது மன நிம்மதியை நாடி வருபவர்களுக்கு முதல் மனவருத்தம்.. பணக்காரர்களுக்கு சரி, ஏழைகளை எண்ணிப்பாருங்கள்.!!

அடுத்தது, புதியவர்கள் எனில் எமாற்றுபவர்களுக்கு, பஞ்சாமிர்தப் பதார்த்தம் கிடைத்த ஆனந்தம். ஆண்டிகள் வேடத்தில் அநியாயத்துக்கு எமாற்றுகிறார்கள். பத்து ருபாய்க்கு அர்ச்சனை, பிரசாதம். தேங்காயை கூட உடைக்காமல், உடைத்த தேங்காயை வைத்து ஏமாற்றுபவர்கள் என சட்டையில்லா சாமியார்களின் சாம்ராஞ்யமாக பழனி.இப்படி நம் மககளையே எமாற்ற பார்ப்பவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். காவல் நிலையம் இருந்தாலும், காசால் கண் கட்டபட்டு இருக்கலாம். இல்லை எனில் பட்டப் பகலில் இது போல பயங்கரங்களைப் பார்க்க முடியுமா?

அடுத்தது, சுற்றுப்புறச் சூழ்நிலையில் சுத்தம். சண்முக நதி முதல் சாமி சன்னிதி வரை சுத்தமானச் சூழ்நிலை என்பது பழனி அறியாத ஒன்று. மலையை சூற்றிலும் குப்பை மேடுகள், இதுவே மலையின் மகிமையை நமக்கு உணர்த்தும். தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் வரும் இந்தக் கோவிலுக்கே இந்த நிலை எனில் மற்ற கோவில்களை எண்ணிப்பார்க்கத் தேவையில்லை. சல்லடை வைத்துச் சலித்தால் மட்டும் போதது, சற்றாவது சுற்றுப்புறச் சூழலையும் சுற்றிப் பார்க்க வேண்டும் அரசாங்கம்.

சாமிதரிசனம், பொதுதரிசன வழியில் செல்பவர்களுக்கு தெரிவது அங்கு இருக்கும் அர்ச்சகர்களின் தலைகள் மட்டுமே.. ஒன்று இரண்டு எனில் சரி, எதற்கு பத்துப் பதினைந்து..? இயன்றவரை இறையடிலாவது ஏமற்றாதீர்கள்.

அடுத்த மதத்தவர்கள், சாமியை தரிசிக்க அனுமதிக்கப் படுவது இல்லை. இறைவன் முன் அனைவரும் சமம் என்பது ஏட்டில் மட்டுமா??

இல்லாத கோவிலுக்கு சண்டையிடுவதை விடுத்து, இருக்கும் கோவிலையாவாது இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப் பாருங்கள்.. பாவிகளால் பாழாகிக் கொண்டிருக்கும் பழனியை பார் போற்றும் பழனியாக மாற்ற எண்ணுங்கள். மக்களே மாறுங்கள், நாடு நம்முடையது. ஏமாற்றாதீர்கள், எம் மக்களும் நம் சகோதரர்கள் தான் என எண்ணுங்கள்.

Friday, March 2, 2007

தமிழா ஆங்கிலமா..??-

பட்டிமன்றங்கள் முதல் பதவிக்காக பதுங்குபவர்கள் வரை பந்தாக பயன்படுத்திய வினா., இருப்பினும் இதோ என்னுடைய பார்வையில்..

என்னை பாதித்த பல நிகழ்வுகளினால் என்னை ஆலோசிக்கவைத்த கேள்வி..தமிழா ஆங்கிலமா..??

கடை வீதியில் பொருள் வாங்கும் போது ஆங்கிலத்தில் குழந்தையை அதட்டும் அம்மா..

இருவர்க்கும் தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் வார்த்தைகளை பரிமாரிக் கொள்ளும் வாடிக்கையாளரும் கடைக்காரரும்..

நமக்கான சின்னச் சின்ன குறிப்புகளில் கூட (மளிகை பட்டியல் முதல் மறதிக்கு குறிப்பு எடுப்பது வரை) ஆங்கிலத்தில் எடுக்கும் பழக்கம்....

கையெழுத்து - யோசித்த்து கூட இல்லை தமிழில் போடுவது பற்றி!!!

தொல்லை தரும் தொலைகாட்சியில், கொஞ்சும் ஆங்கிலத்தின் நடுவில் ஆங்காங்கே இடையில் இன்பதமிழ்...

இவ்வாறு நம்மை அறியாமல் நமது சொத்தை தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் நாம்...

ஆங்கிலம் ஒரு மொழி, கத்துக்கொள்வது தவறு இல்லை. நம்மில் இல்லா நல்ல விசியங்களை கத்துகொள்ள ஒரு ஊடகம்..

முதாதையர் சொத்துகாக உறவினர்களின் உயிரை கூட எடுக்கும் இந்த காலத்தில், உயிரினும் மேலான தமிழை எப்படி உதாசனப்படுத்தலாம்..???

தமிழ் நமது சொத்து, உடலில் ஜீன்கள் போல், நமது உயிரில் கலந்தது தமிழ்.

வெட்டிப் பதட்டுக்காக, ஆங்கிலத்தில் அறையும் குறையுமாக, அல்லல் பட்டு அசத்த நினைப்பதை விட, தன்னார்வத்துடன் தமிழை நமது நாவீல் தவலவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக, நம்முல் அழியும் அமுதத்தை அடுத்த பல தலைமுறைகளுக்கும் அள்ளிக்கொடுக்கலாம்.